மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில், சட்டவிரோதமாக உடும்பு பிடிக்கச் சென்ற இடத்தில் மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த 9 சிலைகள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமணி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரும், நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள நாகநாத சுவாமி கோவில் பின்புறம் சட்டவிரோதமான முறையில் உடும்பு வேட்டைக்காகச் சென்றுள்ளனர். அங்கு புதருக்குள் உடும்பு ஒன்று புகுந்ததால், அதைத் துரத்திச் சென்று இரும்புப் பாறையைக் கொண்டு குழி தோண்டியுள்ளனர். அப்போது, இரும்புப் பொருளின் மீது ஏதோ உலோகப் பொருள் உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது, அது சாமி சிலை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன் மற்றும் வட்டாட்சியர் நக்கீரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் அந்த இடத்தில் முறையாகத் தோண்டப்பட்டதில், சுமார் 3 அடி உயர நடராஜர் சிலை, பெருமாள், விஷ்ணு, அம்மன் சிலைகள் மற்றும் பீடங்கள் என மொத்தம் 9 சிலைகள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன.

மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் பழங்காலத்தைச் சேர்ந்த வெண்கல சிலைகளா அல்லது ஐம்பொன் சிலைகளா என்பது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே உறுதியாகத் தெரியும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார். இந்தச் சிலைகள் எப்படி அங்கு வந்தன என்பது குறித்து மன்னார்குடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version