சென்னையிலுள்ள முக்கிய ஆதார் சேவை அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக டிசம்பர் மாத தொடக்கத்திலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அந்த அலுவலகம் தொடங்கப்படாமல் இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கோயம்பேட்டில் இயங்கி வந்த மத்திய அரசின் ‘ஆதார்’ சேவை மையம், அண்ணா நகருக்கு மாற்றப்படுவதற்காக டிசம்பர் மாத தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதனால், கோயம்பேடு அலுவலகத்தில் ஆதார் சேவைகள் நிறுத்தப்பட்டன. அலுவகம் மாற்றப்பட்ட இடமான அண்ணா நகர், கிழக்கு 3-வது அவென்யூவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன (TNUIFSL) கட்டிடத்தின் முதல் மாடியில் டிசம்பர் 15 முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 27 ஆம் தேதியான இன்று வரை அந்த அலுவலகத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு பணிகள் கூட முடிக்கப்படாமல் உள்ளது. மேலும், அந்த கட்டிடத்தின் வெளியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், “ஆதார் சேவை மையத்தின் புதுப்பித்தல் காரணமாக ஜனவரி 10 ஆம் தேதிக்கு பிறந்து செயல்படும்” என குறிப்பிடப்பட்டுள்ள கையோடு, “மேலும் இது நீட்டிக்கப்படலாம்” எனவும் குறிப்பிடப்பட்டிருப்பது அங்குவரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் பதிவு, பெயர், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் என இ-சேவை மையங்களில் தீர்வு காண முடியாத பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த அலுவலகத்தை தான் மக்கள் நாட வேண்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வந்து செல்ல வேண்டியிருக்கும் நிலையில், அவர்களே அறிவித்த தேதியை கடந்தும் பணிகளை முடிக்காமல் வைத்திருப்பது என்பது மக்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது. காரணம், இதனை நம்பி நெடுந்தூரத்திலிருந்து வரும் மக்களின் பயணம், அதற்கான செலவு, உடலுழைப்பு என அனைத்தும் வீணாவதுடன், ஆதார் திருத்த பணியால் செய்ய முடியாமல் இருக்கின்ற எஸ்.ஐ.ஆர் போன்ற அவர்களின் இதர அலுவல் சார்ந்த பணிகளை முடிக்க முடியாமல் விழிபிதுங்கியுள்ளனர்.
ஆதார் சேவை மைய பணிகளை விரைந்து முடித்து மக்களுக்கு சேவை வழங்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு தற்காலிக மாற்று ஏற்பாடுகளையாவது செய்ய வேண்டும் என்பதே மத்திய தகவல் தொழிற்நுட்பத்துறைக்கு பாதிக்கப்பட்டு வரும் மக்களின் வலியுறுத்தலாக உள்ளது.

