தமிழ்நாடு அரசு, இல்லத்தரசிகளின் சுயசார்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், “வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்” திட்டத்தை அறிவித்தார். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இயற்கை முறையில் காய்கறிகள், கீரைகள், பழவகைகளை விளைவித்து குடும்பத் தேவையை பூர்த்தி செய்வதோடு, உபரி விளைபொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்குகிறது. நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் வீட்டு மாடியிலோ அல்லது முற்றத்திலோ தோட்டம் அமைக்க, அரசு முழுமையான ஆதரவு அளிக்கும். இடுபொருள் தொகுப்புகள், தரமான விதைகள், பழச் செடிகள், நீரியல் தோட்டம் (ஹைட்ரோபோனிக்ஸ்), செங்குத்துத் தோட்டம் அமைப்புகள் மற்றும் நிழல்வலைக் குடில்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

ஏற்கனவே மாடித்தோட்டத் திட்டம் செயல்பட்டு வந்தாலும், பெண்களின் பங்களிப்பை அதிகரித்து அவர்களை சுயதொழில்முனையாளர்களாக மாற்றும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரசாயனமில்லாத ஆரோக்கியமான உணவை வீட்டிலேயே உற்பத்தி செய்வதால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

அதேசமயம், சிறிய அளவிலான விற்பனை மூலம் பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.வேளாண் பட்ஜெட்டில் மேலும் சில முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. சீமைக் கருவேல மரங்களை அகற்ற ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்க ரூ.27.82 கோடி செலவிடப்படும்.

இவை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்க உதவும்.இல்லத்தரசிகளை முன்னிலைப்படுத்தி பாதுகாப்பான உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம், வேளாண் துறையின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது. நகரங்களில் வாழும் பெண்களிடையே இது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version