தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், விவசாயிகளின் நலனை அரசு புறக்கணித்துவிட்டதாகவும் தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதையடுத்து சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட வானதி சீனிவாசன், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது பதிவில், “கோட் சூட் போட்ட விவசாயி முதலமைச்சர் அவர்களே…” என்று குறிப்பிட்டு, த.வெ.க. தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும், விதைப்புக் கால நிதியுதவியாக ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டிய வானதி சீனிவாசன், “மூன்று வேளை பசி எடுத்தால் சாப்பாட்டை நினைக்கிறோம்; ஆனால் அந்த சாப்பாட்டை உருவாக்கும் விவசாயியை மறந்துவிடுகிறோம்” என்ற வசனத்தை நினைவுபடுத்தினார்.

பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விவசாயிகளின் நலனை காற்றில் பறக்கவிட்டதுபோல இந்த வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததே முக்கிய ஏமாற்றமாக உள்ளதாகவும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு இந்த பட்ஜெட் பதிலளிக்கவில்லை என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version