இன்றும், நாளையும் (21,22) ஆகிய தேதிகளில் இரட்டை இலை தொடர்பான வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி, புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தனித்தனியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சார்பில் அவரவர்களது தரப்பில் வாதிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ள விசாரணைக்காக அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம் செய்துள்ளனர்.
செல்லூர் ராஜு நேற்று (21.05.2025) இரவே டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில் இன்று(22.05.2025) காலை நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவில் மூத்த நிர்வாகிகளை சந்திப்பதற்காக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..