தவெகவில் அதிமுக எம்.எல்.ஏக்களை சேர்ப்பதை ஆரோக்கியமான அரசியலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
தவெக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை தடுப்பதற்காகவும் இடது சாரி கட்சிகளோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள் இந்த முடிவை மேற்கொண்டது. நாங்கள் ஆதரவை நல்கி இருக்கிறோம்.
வெளியில் இருந்து ஆதரவு நல்கிய நிலையில் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்னும் தவெகவின் அழைப்பை ஏற்று இயக்கத்தோழர்களுடன் கலந்தோலோசனை செய்து, அதனடிப்படையில் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறோம்.
இந்த நிலையில் தவெக தலைவருக்கு, முன்னணி பொறுப்பாளருக்கு விடுக்கிற வேண்டுகோள், எந்த சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். இந்த நம்பிக்கையோடு நீங்கள் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும்.
விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில், தவெக தலைமை செயல்படக்கூடாது என்பது எங்கள் விருப்பம்.
அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளைச் சந்திக்கும் என்பதை தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுகவுடன் ஆதரவு கோருவதில் நெருடல் இருந்ததாக தவெக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒரு வேளை பாஜகவுடன் கூட்டணி இல்லாமல், அதிமுக தனித்து தேர்தலை சந்தித்திருந்தால், அவர்களோடு சேர்ந்து ஆட்சியமைக்கிற முயற்சியை தவெக முன்னெடுத்திருக்கும்.
அவ்வாறு இல்லாமல் காங்கிரஸ் ஆதரவையும், இடது சாரிகளின் ஆதரவை நாடியதற்கும் அதிமுக பாஜக உறவுதான் காரணம் என்பதை தவெக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆகவேதான் இன்றைக்கு அதிமுக இத்தகைய நெருக்கடியைச் சந்திக்கிற சூழல் உருவாகியிருப்பதாக நான் கருதுகிறேன்.
இது ஒருபுறம் இருந்தாலும், தவெக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது என்பது வேண்டுகோள்.
யார் சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தாலும், அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது தவெக மீதான நம்பகத் தன்மையைப் பாதிக்கச் செய்யும். எனவே இதில் தவெக தலைமை கவனமாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
