திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை, போதை ஆசாமி ஒருவர் கள்ளச்சாவி மூலம் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் (38) என்பவர், யாரும் கவனிக்காத நேரத்தில் ஆம்புலன்ஸைத் திருடி அதிவேகமாக எடுத்துச் சென்றார். தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆம்புலன்ஸ், முன்னால் சென்ற லாரி ஒன்றின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தை ஏற்படுத்திய கையோடு அங்கிருந்து தப்பிக்க முயன்ற சக்திவேலை, லாரி ஓட்டுநர் அங்கமுத்து மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர். பிடிபட்டவரை அங்கேயே லாரி முன்பாக அமர வைத்த பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையில் இருந்த சக்திவேலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் முன்னரும் ஆம்புலன்ஸ் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. எனவே, மருத்துவமனை வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என ஓட்டுநர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version