மாணவர்களின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்க முயற்சிக்கும் யாரையும் மோடி அரசு ஒருபோதும் விட்டுவைக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் அனைத்து மாணவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்று மக்களவையில் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா, இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கில், பொதுத் தேர்வுகளின் புனிதத்தன்மையை குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் வலுவான சட்ட ஏற்பாடுகளை கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்க முயற்சிக்கும் யாரையும் மோடி அரசு ஒருபோதும் விட்டுவைக்காது எனவும், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முழு கடுமையையும் சந்திப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.
