ழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பான முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இணைத்து விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனியைச் சேர்ந்த அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார் தாக்கல் செய்த மனுவில், பழனி மடத்துக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு டோக்கன் வழங்க அனுமதி அளித்த அதிகாரி பதிவு நடைபெற்ற நாளில் விடுப்பில் இருந்ததாகவும், அலுவலக உதவியாளரும் அன்றைய தினம் பணியில் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொடைக்கானல் சார் பதிவாளர் ஆவண எண்ணை ஒதுக்கி பத்திரப்பதிவை மேற்கொண்டதாகவும், இதில் பல அதிகாரிகள் தொடர்புடையிருக்க வாய்ப்புள்ளதால் முழுமையான விசாரணை அவசியம் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மட நில பத்திரப்பதிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையை முன்வைத்து ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு முன் நிலுவையில் உள்ள வழக்குடன் இந்த மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, சிபிஐ விசாரணை கோரிய இந்த மனுவையும் ஏற்கனவே நிலுவையில் உள்ள தொடர்புடைய வழக்குடன் சேர்த்து இரு நீதிபதிகள் அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version