அமித் ஷா ஒரு முறை வந்ததற்கு பா.ம.க. உடைந்து விட்டது, அடுத்த முறை வருவதற்குள் அதிமுகவில் பிளவு வந்து விட்டது, கட்சிகளை உடைக்க நாங்கள் தேவையில்லை அமீத்ஷா அடிக்கடி வந்தாலே போதும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஆலந்தூர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

திமுகவை எப்படியும் வரும் தேர்தலில் வீழ்த்தி விட வேண்டும் என்பதற்காக அமித் ஷா அடிக்கடி வந்து போகிறார். நாடாளுமன்ற தேர்தலின் போது 8 முறை மோடி வந்தார். மோடியை ஒட ஒட விரட்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். மோடி 8 முறைக்கு வரும் முன் ஒரு சீட்டில் இருந்தார்கள். ஆனால் அதன் பின் அதுவும் போய்விட்டது.

அமித் ஷா எங்கே செல்கிறாரோ அங்கே எல்லாம் பெரிய கட்சிகள் வீழ்ந்து விடும். மகாராஷ்டிராவிற்கு சென்ற போது அண்ணன்- தம்பியை பிரித்தார். சரத்பவாருக்கும் அவரது தம்பிக்கும் சண்டை வந்து கட்சியை உடைத்தார்கள். சிவசேனா கட்சியும் இரண்டாக உடைந்தது. தமிழ்நாட்டில் அமித் ஷா கால் வைத்ததும் பா.ம.க.வில் 2 பேர் சண்டை போட்டு கொண்டனர்.

தமிழ்நாட்டிற்கு அடிக்கடி அமித் ஷா வர வேண்டும். கட்சிகளை உடைக்க நாங்கள் தேவையில்லை. ஒரு முறை வந்தார் பா.ம.க.வை உடைத்தார். அடுத்த முறை வந்தார் அதிமுகவில் பிளவு ஆரம்பித்து விட்டது. வேலுமணி கோஷ்டி, எடப்பாடி கோஷ்டி என உள்ளது. எந்த பக்கம் போகலாம் என்று உள்ளனர். செல்லூர் ராஜு வீட்டில் வேலை செய்தவன் 200 கோடி எடுத்து போனதாக தகவல் வருகிறது. திருடனுக்கு தேள் கொட்டினால் சொல்ல முடியாத நிலையில் போலீஸ் நிலையத்தில் புகார் தர அவருக்கு பயம். அதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக வீட்டில் ரூ.250 கோடி. இது எல்லாம் யார் பணம். ஆராய்ச்சி நடக்கிறது.

தமிழ்நாடு மக்கள் திமுக பின்னால் இருக்கிறார்கள். 100க்கு 90 சதவீத தாய்மார் திமுகவிற்கு வாக்களிப்போம் என சத்தியம் செய்து தந்து உள்ளனர். உரிமை தொகை விட்டுபட்டு போனவர்களுக்கு ஒரு மாதத்தில் திமுக பெற்று தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version