ஒடிசா மாநிலம் புரியில் அமைந்துள்ளது ஜெகநாதர் கோயில். 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரம்மாணடமாக நடைபெறுவது வழக்கம். இந்த ரத யாத்திரையில் ஒடிசா மக்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஒன்று கூடுவர்.
இந்த நிலையில் புரியில் நடந்த ரத யாத்திரையில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4.30மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெகநாதர் கோயில் அருகேயுள்ள ஸ்ரீகுண்டிகா கோயிலில் ரதங்கள் சென்று கொண்டிருந்த போது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரதங்கள் குண்டிகோ கோயிலை நெருங்கியப் போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முண்டியடித்துக் கொண்டனர். அப்போது சிலர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அவ்வாறு விழுந்தவர்களில் பிரபாதி தாஸ், பசந்தி சாஹூ ஆகிய இரண்டு பெண்கள் உட்பட 70 வயதான பிரேமகாந்த் மொஹந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் ஒடிசாவின் குர்தா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ரத யாத்திரைக்காக புரிக்கு வந்திருந்தனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.