திருவள்ளூர் அருகே மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவத்தையடுத்து, தொழிலாளர்களின் நலன், தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற துயர சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது என சுட்டிக்காட்டி உள்ளார்.  இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் அறிவித்துள்ள 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை ஏழை குடும்பங்களுக்குப் போதாது என்றும் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது அரசு வழங்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டார். சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version