கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆன்லைன் விற்பனை முறை மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தார். டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவை முழுமையாகப் படித்துவிட்டுப் பின்னர் பதிலளிப்பதாக அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளில் ஸ்கேனிங், ஜிபே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதிகள் இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களிடம் 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதை முழுமையாகத் தடுக்கும் வகையிலேயே தற்போது ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை சுமார் 700 பேர் இதன் மூலம் ஆர்டர் செய்துள்ள நிலையில், புதிய நடைமுறை என்பதால் எழும் ஆரம்பக்கட்டச் சிக்கல்கள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

‘மது இல்லாத தமிழகம்’ என்ற கொள்கை பேசப்படும் நிலையில் இந்த ஆன்லைன் வசதி மது அருந்துவோரை ஊக்குவிப்பதாக அமையாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது அதற்கான வசதி அல்ல எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பில் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கவும், பணப்பரிவர்த்தனைக்கான நேரத்தைக் குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவுமே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.

வாடிக்கையாளர்கள் கேட்கும் பிராண்டுகளைத் தராமல், குறிப்பிட்ட சில பிராண்டுகளை மட்டுமே கடைகளில் கட்டாயப்படுத்தி விற்கும் போக்கைத் தடுக்கவும் இந்த ஆன்லைன் முறை உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கடையில் என்னென்ன மதுபானங்கள் இருப்பில் உள்ளன என்பதை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே இதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும். கடைகளில் உள்ள அனைத்து பிராண்டுகளையும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கடை ஊழியர்களின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் ஏற்கெனவே விற்பனையில் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மது விநியோகத்தில் எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் ஏகபோக உரிமை கிடையாது என்றார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மதுபானங்களை வழங்குவதே துறையின் நோக்கம் என்றும், அதன் அடிப்படையில் பாஸ்டர்ஸ், பட்வைசர் போன்ற மதுபானங்களுக்கான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த இரண்டரை மாதங்களாக டாஸ்மாக் துறையைச் சீர்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறிய அமைச்சர் விக்னேஷ், மதுபானம் என்பது ஓர் அதிசயப் பொருள் அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றார். மேலும், கேரள மாநிலத்தைப் போலத் தமிழகத்திலும் மதுபானம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version