அனிதா ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தன் மனநிலையை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவராகவே இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளரிகளின் சந்தித்து பேசியதாவது;-

தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களுக்காக நாள்தோறும் பல்வேறு சிறப்பான பணிகளை ஆற்றி வருகிறார்; புதிய திட்டங்களையும் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, அது குறித்து முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்.

பட்டா மாறுதலை எளிதாக்குவதற்காகப் புதிய செயலி குறித்து வில்லங்கம் இல்லாமலும், பாகப்பிரிவினை சிக்கல்கள் இல்லாமலும் முழுமையாகப் பத்திரப்பதிவு செய்யும்போது, குடும்பத்தினர் அனைவரும் இதன் மூலம் நேரடியாகப் பயன்பெறலாம். இதற்கான அரசாணை முதலமைச்சரின் ஒப்புதலோடு நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் செயலி நடைமுறைக்கு வரும்போது, மக்கள்  எவரையும் அணுகாமல், பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா மாறுதல் ஆகிவிடும். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தையோ அல்லது துணை ஆட்சியரையோ அணுக வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாகவே மக்களுக்குப் பட்டா கிடைக்கும் வகையில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பத்திரப்பதிவு செய்பவர்களில் 40 சதவீத மக்களின் சிரமங்கள் குறையும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் நபர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து, நத்தம் புறம்போக்கு மற்றும் இதர இடங்களில் குடியிருப்பவர்கள் பற்றிய ஆய்வுப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், விரைந்து பட்டாக்கள் வழங்குவதற்காகப் புதிய நடைமுறை மாற்றங்களை உருவாக்கி வருகிறோம்.

தற்போது வட்டாட்சியரே அனைத்துப் பணிகளையும் ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனை மாற்றி அமைக்கலாம் எனத் துறையின் சார்பில் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்குமான எல்லைக் கோடுகள் அளக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, அனைவருக்கும் பட்டா வழங்குவதற்கான செய்தி முறைப்படி அறிவிக்கப்படும்.

கைவிடப்பட்ட கல்குவாரிகளை வைத்திருப்பவர்கள், எந்த அடிப்படையில் அதனை வைத்துள்ளார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். துறை சார்ந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, கல்குவாரி உள்ள இடங்களில் பாதுகாப்பு முள்வேலிகள் அமைக்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்த நிதி மதிப்பீடுகளைத் தயாரிக்க வேண்டும். அதன் பிறகு அரசின் ஒப்புதல் பெற்று, இத்திட்டம் முறைப்படி அமல்படுத்தப்படும்.

 

கொடநாடு என்பது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இடமாகும். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, “உயர் பொறுப்பில் யார் இருந்தாலும், இதில் தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இது குறித்தும் முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்.

 

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வந்துதான் அந்த இயக்கத்தையோ, ஆட்சியையோ காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. அவர் அவதூறாகப் பேசினார் என்பதற்காக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார்; ஆனால் அது வழங்கப்படவில்லை. அதன் பிறகு காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்ததால், அவர் தன் விருப்பம்போலக் கருத்துகளைக் கூறி வருகிறார். அவருடைய அனைத்துக் கருத்துகளுக்கும் நம்மால் பதில் சொல்ல இயலாது.

அனிதா ராதாகிருஷ்ணன் முதன்முறையாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியது அதிமுகவில்தான். இங்கு அவர் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அதன் பிறகு, சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பம் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து அங்கேயும் அமைச்சரானார். அவருடைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது, சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தன் மனநிலையை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவராகவே அவர் தெரிகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த தோழமைக் கட்சிகள் போட்டியிடுவது குறித்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனைவரும் மனம் விட்டுப் பேசினர். அந்தக் கருத்துகளைத் தற்போது வெளியில் அறிவிக்க இயலாது. காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version