அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அபராத தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் மகளிர் போலீசார், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதுபற்றி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. அவர்கள் ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரித்து கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன், குற்றவாளி தான் என்று கடந்த வாரம் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். அதன் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு..
பி.என்.எஸ் சட்டப்பிரிவு
329 – விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் – 3 ஆண்டுகள்
126(2) – சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – 1 மாதம்
87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்
127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1 ஆண்டுகள்
75(2) – விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் – 3 ஆண்டுகள்
76 – கடுமையாக தாக்குதல் – 7 ஆண்டுகள், 10ஆயிரம் ரூபாய் அபராதம்
64(I) பாலியல் வன்கொடுமை – 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் – 25,000 அபராதம்
351(3) கொலை மிரட்டல் விடுத்தல் -7ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்
238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல் – 3ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000
66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் – 3 ஆண்டுகள், 25ஆயிரம் அபராதம்
தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் 2002 பிரிவு 4 – தண்டனை இல்லை
மொத்தமாக 90,000 அபராதம்,, அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்