அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா கால்பதித்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது.  இளையராஜாவின்  வாழ்க்கை, இசை, சாதனைகள் குறித்த 50 சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக

ராசய்யா டூ ராஜா

  • இளையராஜாவின் இயற்பெயர் “ஞானதேசிகன் என்பதாகும். பள்ளிக்குச் சேர்க்கும்போது அவரது தந்தை அதை ‘டேனியல் ராசப்பா’ என மாற்றினார். கிராமத்தினர் அவரை ‘ராசய்யா’ என்று அழைத்தனர்.
  • தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பண்ணைப்புரம் கிராமத்தில் ராசய்யா பிறந்தார்.
  • குடும்ப வறுமை காரணமாக ராசய்யா 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது.
  • 1958-இல் அவரது அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, தாயார் சின்னத்தாயின் அறிவுறுத்தலால் இளையராஜா முதன்முதலாக மேடையில் பாடினார்.
  • தனது அண்ணன்களுடன் இணைந்து ‘பாவலர் சகோதரர்கள்’ என்ற குழுவை உருவாக்கிய இளையராஜா, இந்தியா முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகள் மற்றும் நாடகங்களில் வாசித்துள்ளார்.
  • கர்நாடக இசையை குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளிடம்  என்பவரிடம் இளையராஜா முறைப்படி பயின்றுள்ளார்.
  • சென்னைக்கு வந்த பிறகு, தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணியில் ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் வாசிக்கக் கற்றார்.
  • தன்ராஜ் மாஸ்டர்தான் இவரை முதன்முதலில் சுருக்கமாக ‘ராஜா’ என்று அழைக்கத் தொடங்கினார்.
  • லண்டனில் உள்ள புகழ்பெற்ற டிரினிடி இசைக்கல்லூரியில் Classical Guitar பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் இளையராஜா.
  • கன்னட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இளையராஜா உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

வெண் திரை சாகசங்கள்

  • 1976-இல் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் எஸ்.தேவராஜ் _ மோகன் இயக்கத்தில் சிவகுமார், சுஜாதா நடிப்பில் வெளியான அன்னக்கிளி‘ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ராசய்யா.
  • ஏற்கனவே ஏ.எம். ராஜா போன்ற பிரபலங்கள் திரைத்துறையில் இருந்ததால், பஞ்சு அருணாசலம்தான் பண்ணைபுரம் ராசய்யாவுக்கு  ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார்.
  •  1988 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.கருணாநிதி இளையராஜாவுக்கு ‘இசைஞானி’ என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.
  • தனது திரையுலகப் பயணத்தில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,600-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார்.
  • இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய ‘மூடுபனி’ திரைப்படம் இளையராஜாவின் 100-வது திரைப்படமாகும்
  • புகழ்பெற்ற இயக்குநர் மணிரத்னத்தின் ‘நாயகன்’ அவரது 400-வது படமாகவும், ‘அஞ்சலி’ அவரது 500-வது படமாகவும் அமைந்தன.
  • இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சசிகுமார்  நடிப்பில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் இளையராஜாவின் 1000-மாவது படமாகும்
  • தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் (ஹாலிவுட்) என பல மொழிகளில் இசையமைத்த மல்டி-லிங்குவல் மாஸ்டர் இளையராஜா.
  • ‘Love and Love Only’ என்ற ஆஸ்திரேலிய-இந்தியத் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
  • ஒரு காலத்தில், எவ்வித உறக்கமுமின்றி ஒரே நாளில் 3 வெவ்வேறு திரைப்படங்களுக்கு பின்னணி இசை (Re-recording) கோர்த்து முடித்துள்ளா இளையராஜா என ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

சிம்பொனி நாயகர்

  • லண்டனின் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக முழு நீள சிம்பொனி இசையை வெறும் 30 நாட்களில் எழுதி முடித்த முதல் ஆசிய கலைஞர் இவரே.
  • இந்த சிம்பொனி சாதனைக்குப் பிறகே லண்டன் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இவருக்கு ‘மேஸ்ட்ரோ’ என்ற பட்டத்தை வழங்கியது.
  • ‘தளபதி’ படத்தில் இடம்பெற்ற ‘ராக்கம்மா கையத்தட்டு’ பாடல், 2002-இல் பிபிசி (BBC) நடத்திய உலகளாவிய வாக்கெடுப்பில் டாப் 10 பாடல்களில் முதலிடம் பிடித்தது.
  • 2013-இல் சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) நடத்திய ‘இந்திய சினிமாவின் 100 ஆண்டுகள்’ வாக்கெடுப்பில், 49% வாக்குகள் பெற்று இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அமெரிக்காவின் ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணையதளம் வெளியிட்ட உலகின் ஆகச்சிறந்த 25 திரைப்பட இசையமைப்பாளர்கள் பட்டியலில், 9-வது இடம்பிடித்த ஒரே இந்தியர் இளையராஜா ஆவார்.
  • உலகப் புகழ்பெற்ற பாப் இசைக்குழுவான பிளாக் ஐட் பீஸ் தங்களது ‘Elephunk’ ஆல்பத்தில், இளையராஜாவின் ‘உனக்கும் எனக்கும்’ (ஸ்ரீ ராகவேந்திரா) பாடலின் இசையை சாம்பிள்  செய்து பயன்படுத்தியுள்ளனர்.
  • சிந்து பைரவி, சாகர சங்கமம், ருத்ரவீணா, பழஸிராஜா, தாரை தப்பட்டை படங்களில் சிறந்த இசைக்காக 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் இளையராஜா.
  • இந்திய அரசு இவருக்கு 2010-இல் பத்மபூஷண் மற்றும் 2018-இல் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.கலைத்துறைக்கான அவரது பங்களிப்பைப் பாராட்டி, ஜூலை 2022 முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இசை  ஆதிக்கம்

  • கர்நாடக இசையில் ‘பஞ்சமுகி’ என்ற முற்றிலும் புதிய ராகத்தை இளையராஜா உருவாக்கியுள்ளார்.
  • பெரும்பாலான இசையமைப்பாளர்கள் வாசித்துப்பார்த்து நோட்ஸ் எழுதுவார்கள்; ஆனால் இளையராஜா, மனதில் தோன்றும் இசையை நேரடியாக காகிதத்தில் நோட்ஸாக எழுதிவிட்டு பின்னரே வாசிப்பார்.
  • இந்தியத் திரையிசையிலேயே, ஒரே ஒரு ஆரோகண ஸ்வர வரிசையை  பயன்படுத்தி சிந்து பைரவி படத்தில் கலைவாணியே என்னும் ஒரு முழுப் பாடலை  உருவாக்கிய ஒரே இசையமைப்பாளர் இவரே.
  • 1986-இல் கமல் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் முதன்முதலாக கம்ப்யூட்டர்  மூலம் பாடல்களையும் பின்னணி இசையையும் பதிவு செய்தார்.
  • இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3D படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ (மலையாளம்) படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
  • இந்தியத் திரையிசைப் பாடல்களில் முதன்முதலில் ஆப்பிரிக்க பழங்குடியின இசைக் கருவிகளையும் தாளங்களையும் பயன்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
  • ‘செம்பருத்தி’ திரைப்படத்திற்காக 9 பாடல்களின் மெட்டுகளை வெறும் 45 நிமிடங்களில் போட்டு முடித்து இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை வியக்க வைத்தவர் இளையராஜா.
  • ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் வரும் ‘ராஜா ராஜாதி ராஜன்…’ பாடலை தாள வாத்தியங்களை மட்டுமே வைத்து பயன்படுத்தி கம்போஸ் செய்திருப்பார்.
  • அஸ்தரை (Astharai), நாதஸ்வரம் மற்றும் தப்பட்டை போன்ற பாரம்பரிய மற்றும் அரிய கருவிகளைத் தனது மேற்கத்திய ஆர்கெஸ்ட்ராவில் இணைத்துப் புதுமை செய்தார்.
  • 100-க்கும் மேற்பட்ட வயலின் கலைஞர்கள் ஒரே நேரத்தில் வாசிக்கும்போதும், எந்த கலைஞர் சிறிய தவறு செய்தாலும் இளையராஜா அதனை எளிதாக கண்டறிந்து விடுவார்.

இசைராஜாவும் பிரபலங்களும்

இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு கலைஞராகப் பணியாற்றியவர் தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.  “அவருக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை” என்று ரஹ்மான் பலமுறை கூறியுள்ளார்.

  • ஒருமுறை சென்னை ஸ்டுடியோவில் இளையராஜாவின் கம்போஸிங்கைக் கேட்ட பாலிவுட் ஜாம்பவான் ஆர்.டி. பர்மன், மகிழ்ச்சியில் அங்கேயே நடனமாடி, “இளையராஜா, நீ 10 ஆண்டுகள் அட்வான்ஸான இசையைத் தருகிறாய்” என்று பாராட்டியுள்ளார்.
  • கமல் மற்றும் ரஜினி நடித்த படங்களில் கிட்டத்தட்ட 20 சதவீதத்திற்கும் அதிகமான படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்துள்ளார்.
  • ஹே ராம்’ படத்திற்கு வேறொரு இசையமைப்பாளர் முதலில் இசையமைத்து, அது பின்னணி இசைக்கு செட் ஆகாததால், பின்னர் இளையராஜாவிடம் கமல் வர, ஏற்கனவே எடிட் செய்யப்பட்ட காட்சிகளுக்குப் பொருத்தமாக புதிய நோட்ஸ் எழுதி வியக்க வைத்தார்.
  • பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இளையராஜாவின் இசையில் ‘சமிதாப்’ (Shamitabh) போன்ற படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
  • பாலிவுட் மாஸ்டர் சலில் சௌத்ரியின் குழுவில் இளையராஜா முன்பு வாசித்தார். பின்னர் ராஜா பெரிய இசையமைப்பாளர் ஆன பின்பும், சென்னை வரும்போதெல்லாம் ராஜாவின் ஸ்டுடியோவிற்குச் சென்று அவரை  சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இசை சாமி!

  • ரமண மகரிஷி மற்றும் கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர்  இளையராஜா. திருவண்ணாமலையோடு மிக நீண்ட ஆன்மீகப் பிணைப்பு உண்டு.
  • இசையைத் தாண்டி இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். ‘அஷ்டவக்ர கீதை’ தத்துவம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • திரைப்படங்கள் மட்டுமின்றி ‘How To Name It?’, ‘Nothing But the Wind’ போன்ற உலகத்தரம் வாய்ந்த சுயாதீன சிம்பொனிக் ஆல்பங்களையும் வழங்கியுள்ளார்.
  • இளையராஜா பிறந்தது ஜூன் 3 என்றாலும், கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளும் ஜூன் 3 என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் விதமாகத் தனது பிறந்தநாளை ஜூன் 2-ஆம் தேதியாக மாற்றி அதையே கொண்டாடுகிறார்.
  • இவரது பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் மறைந்த பவதாரணி ஆகிய மூவருமே திரையுலகில் சிறந்த இசையமைப்பாளர்களாகவும் பாடகர்களாகவும் உருவெடுத்தனர்.
  • அன்னக்கிளியில் தாலாட்டத் தொடங்கிய இசை இன்றளவுக்கும் உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு உயிரூட்டி வந்து கொண்டிருக்கிறது.தொகுப்பு – மு.செய்யது
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version