நேற்று நடைபெற்ற கே.கே.ஆர் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில், விராட் கோலி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது 78-வது ரன்னை எடுத்தபோது அவர் இந்தச் சாதனையை எட்டினார். மேலும், உலக அளவில் டி20 போட்டிகளில் அதிவேகமாக (வெறும் 409 இன்னிங்ஸ்களில்) 14,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் படைத்து, ‘ரன் மெஷின்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 423 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் (431 இன்னிங்ஸ்), ஜாஸ் பட்லர் (468 இன்னிங்ஸ்), மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் (505 இன்னிங்ஸ்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில் கோலி வெறும் சாதனையோடு நிறுத்தாமல், 60 பந்துகளில் 105* ரன்கள் குவித்து தனது 9-வது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக்-அவுட் ஆகி விமர்சனத்திற்குள்ளான கோலி, இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் விமர்சகர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மற்றொரு சிறப்பம்சமாக, இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் (279 போட்டிகள்) விளையாடிய வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இதன் மூலம் எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மாவின் (தலா 278 போட்டிகள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். 14,000 ரன்கள் மற்றும் அதிக போட்டிகள் என ஒரே நாளில் இரட்டைச் சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது அதிரடியால் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version