டெல்லியில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜகவில் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கடந்த 2ம் தேதி டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து தனது நிலையை விளக்கினார். இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக உடனடியாக டெல்லி வருமாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார். அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை என கூறப்பட்டது.
இந்தநிலையில், அண்ணாமலையின் ராஜினாமா முடிவை ஏற்பதாக பாஜக தேசியத் தலைமை இன்று (ஜூன் 5) அறிவித்தது. இதையடுத்து, காணொலி வாயிலாக பேசிய அண்ணாமலை, புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தார். அடுத்து வர உள்ள தேர்தலில் கட்சி அமைத்து போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தனது அரசியல் இயக்கத்தில் ஆதரவாளர்கள் இணைவதற்கான இணையதளப் பக்கத்தையும் அண்ணாமலை அறிவித்தார். அதில், தற்போதை நிலவரப்படி அண்ணாமலையில் இயக்கத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
