கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் ஜூலை 12-ஆம் தேதி (நாளை) மாலை நடைபெறவுள்ள “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டை “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையேற்று நடத்துகிறார். சமூக விழிப்புணர்வு நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாநாடு, அவரது புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, காவல் துறை பணியை ராஜினாமா செய்து அரசியலில் களமிறங்கியவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, குறுகிய காலத்திலேயே தமிழக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தனது கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி காரணமாக அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

இதையடுத்து அவர் “வீ தி லீடர்ஸ்” என்ற அமைப்பை தொடங்கி, மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னெடுத்தார். இந்த அமைப்பில் தற்போது 19 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த காலத்தின் புகைப்படங்களும், தலைமைத்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலான விளம்பரப் பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் மாநில அரசின் செயல்பாடுகள், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள், கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து விரிவாக பேசவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிடும் கருத்துகளும், அடுத்தகட்ட அரசியல் அறிவிப்புகளும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version