2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியேயான ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சோமாலியாவைச் சேர்ந்த பிரபல நடுவர் ஓமர் அர்தானுக்கு (Omar Artan) அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.

உலகக் கோப்பைக்கான இறுதித் தயாரிப்புகளில் பங்கேற்பதற்காக, ஃபிபா (FIFA) அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 நடுவர்களுடன் இணைவதற்காக ஓமர் அர்தான் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். தன்னிடம் முறையான விசா மற்றும் தேவையான அனைத்து பயண ஆவணங்களும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரிடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் முடிவில், அவர் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர் எனக் கூறி, வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை, உலகக் கோப்பை தொடருக்காகப் பயணிக்கும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் விசா கொள்கைகள் மற்றும் குடியேற்ற நடைமுறைகள் குறித்த பல்வேறு கேள்விகளையும், அச்சங்களையும் எழுப்பியுள்ளது.

34 வயதான ஓமர் அர்தான், உலகக் கோப்பை வரலாற்றிலேயே நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சோமாலியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறவிருந்தவர். கடந்த 2025-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகச்சிறந்த நடுவருக்கான விருதை (CAF Referee of the Year) வென்றவர்.

அத்துடன், சிலியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள், ஆப்பிரிக்கக் கோப்பை போட்டிகள் (AFCON) எனப் பல சர்வதேசப் போட்டிகளை வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். இவரது அசாத்திய திறமையைப் பாராட்டி, கடந்த மார்ச் மாதமே உலகக் கோப்பை நடுவர் குழுவில் ஃபிபா இவரை இணைத்திருந்தது.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு ஓமர் அர்தான் அளித்துள்ள பேட்டியில், “என்னிடம் முறையான விசா மற்றும் அனைத்து சரியான ஆவணங்களும் இருந்தன. இருந்தும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய உலகக் கோப்பைக்கான வெள்ளை மாளிகை பணிக்குழுவின் தலைவர் ஆண்ட்ரூ கியூலியானி (Andrew Giuliani), “பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்த இந்த முடிவு சரியானதுதான், அதை நான் ஆதரிக்கிறேன்” என்று அமெரிக்க அரசின் தரப்பை நியாயப்படுத்தியுள்ளார்.

மறுபுறம், இந்த விவகாரத்தில் தலையிட சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா மறுத்துவிட்டது. இதுகுறித்து ஃபிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் குடியேற்ற நடைமுறைகளிலோ அல்லது விசா வழங்கும் முடிவுகளிலோ ஃபிபா தலையிடுவது இல்லை. உலகக் கோப்பை நடத்தும் நாட்டின் அரசுதான் யாருக்கு விசா வழங்க வேண்டும், யாரை நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது” எனத் தெரிவித்துத் தட்டிக் கழித்துள்ளது.

முறையான விசா இருந்தும் ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த நடுவர் ஒருவரை அமெரிக்கா திருப்பி அனுப்பியதற்கும், அதற்கு ஃபிபா மௌனம் காப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் ஸ்மித் உள்ளிட்ட பல விளையாட்டு ஆளுமைகளும் இந்த நடவடிக்கைக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version