தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை பழிவாங்கல் நடவடிக்கையே என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை திமுக கொறடாவுமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2006- 2011 வரை எ.வ.வேலு அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், 2022ம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை பழிவாங்கல் நடவடிக்கையே என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திமுக மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்குமாறு முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியதால் சோதனை நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சோதனைகளால் அஞ்சுவோம் என தவெக அரசு நினைப்பதாகவும், ரூ.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது உண்மைக்கு மாறானது என்றும் கரூர் நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

