தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, செல்போன் பயன்பாடு மற்றும் சத்தமாக பாட்டு ஒலிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், பயணிகள் சிலர் ஸ்பீக்கர் போனில் பேசுவது மற்றும் சத்தமாக வீடியோக்கள் பார்ப்பதால் இரைச்சல் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் முத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் தேர்வுக்குத் தயாரிப்பு செய்யும் மாணவர்களுக்கு இது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்ததுது.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார். அதில், பேருந்தில் செல்லும் பயணிகள் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இயர்போன் அல்லது ஹெட்போன் பயன்படுத்தி மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோக்களைக் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் போனில் உரையாடுவதையோ அல்லது போனில் சத்தமாகப் பேசுவதையோ தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடக்கூடாது எனத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வுத் தகவல்களை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் ஸ்டிக்கர்களாக ஒட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
