அயோத்தி ராமர் கோயிலுக்குத் தனது குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கிய 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட ‘ராமசரிதமானஸ்’ புத்தகம் மாயமானதாக, முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் எஸ். லட்சுமிநாராயண் குற்றம் சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1970-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான லட்சுமிநாராயண், ஏப்ரல் 2024-ல் நடந்த ராம நவமி விழாவின் போது, இந்தச் சிறப்புமிக்க புத்தகத்தை கோயிலுக்கு வழங்கியதாகக் கூறியுள்ளார். சுமார் 150 கிலோ எடை கொண்ட இந்தப் புத்தகத்தில், தனது மறைந்த தாயாரின் நகைகளை உருக்கி, சுமார் 800 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுப் பக்கங்கள் தயாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்தப் புத்தகம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த நன்கொடைக்குத் தன்னிடம் எந்த ரசீதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்கொடை வழங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, கோயிலுக்குச் சென்ற தனது உறவினர்கள் அந்தப் புத்தகம் அங்கு இல்லை என்று தெரிவித்ததையடுத்து, லட்சுமிநாராயண் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயைச் சந்தித்து முறையிட்டுள்ளார்.

தன்னுடைய இந்த நன்கொடை சாதாரணமானது அல்ல, அது தனது குடும்பத்தின் ஆழ்ந்த உணர்வுகளுடன் தொடர்புடையது என்று அவர் அறக்கட்டளை அதிகாரிகளிடம் கடிதங்கள் மற்றும் செய்திகள் மூலம் பலமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அறக்கட்டளை தரப்பிலிருந்து எந்தவொரு திருப்திகரமான பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் சுமார் 7 முதல் 7.5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக ஏற்கனவே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது லட்சுமிநாராயணின் இந்தப் புதிய புகார், கோயில் காணிக்கைகளைச் சேகரிப்பதிலும், கணக்கிடுவதிலும் ஈடுபட்டுள்ள நபர்களின் செயல்பாடுகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version