அயோத்தியில் பக்தர்களின் பக்தி நிதியான ராமர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் பெரும் திருட்டு சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமருக்கு அர்ப்பணித்த பணத்தில் சுமார் இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வரை திருடப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி பெரும் அளவில் வளர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உண்டியல் எண்ணும் பிரிவில் பணியாற்றிய சில ஊழியர்களே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரிகள் தெரிவித்தபடி, ஆறு ஊழியர்கள் பணியில் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திருட்டை தொடங்கியுள்ளனர். முதலில் தங்கள் உடைகளுக்குள் ஒரு இரு ரூ.500 நோட்டுகளை மறைத்து எடுத்துச் சென்ற அவர்கள், யாரும் கண்டுபிடிக்காததால் தைரியம் அடைந்து, பின்னர் முழு பணக்கட்டுகளையே திருடும் அளவுக்கு மோசடியை விரிவுபடுத்தியுள்ளனர். இந்த திருட்டுக்கு முக்கிய காரணமாக சிசிடிவி கேமராக்கள் முறையாகக் கண்காணிக்கப்படாதது சுட்டிக்காட்டப்படுகிறது.
கண்ட்ரோல் ரூம் பல நேரங்களில் காலியாக இருந்ததால், ஊழியர்கள் பணத்தை சுலபமாக வெளியே கொண்டு செல்ல முடிந்தது. அறக்கட்டளை மற்றும் எஸ்பிஐ இடையேயான ஒப்பந்தப்படி, உண்டியல் திறப்பு முதல் எண்ணும் பணி வரை பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ், சீருடை அணிதல், தனிப்பட்ட பொருட்கள் கொண்டு வர தடை, உடல் சோதனை, திடீர் சோதனைகள் உள்ளிட்டவை அடங்கும். ஆனால் இந்த விதிகள் பெரும்பாலும் காகிதத்தில் மட்டுமே இருந்ததாகவும், நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் பரிந்துரை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் மனீஷ் குமார் யாதவ் என்பவர் தன் மாமாவின் பரிந்துரையின் பேரில் பணியில் அமர்ந்தார். மே 11ம் தேதி முதல் அவர் தொடர்ந்து திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அயோத்தி உள்பட பல இடங்களில் சொத்துகள் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. சமீபத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.79 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் அனில் மிஸ்ரா உள்ளிட்டோரையும் குற்றவாளியாகச் சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். திருட்டு பற்றி முன்கூட்டியே தெரிந்தும் நடவடிக்கை எடுக்காததாக அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, மேலும் பலரின் தொடர்பு இருக்கலாம் என சிறப்பு குழு ஆராய்ந்து வருகிறது.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோயில் நிர்வாகத்தின் பாதுகாப்பு அமைப்பு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

