அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது அரசின் கடமை என்ற நிலையில், ஜோதிடப் பின்னணி கொண்ட ஒருவரை தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக நியமித்துள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஜோதிடராக அறியப்படுபவர். இவர்தான் விஜய்க்கு சமீப காலமாக ஜோதிடம் பார்த்து வந்தவர். இந்த நிலையில் அவரது இந்த நியமனம் அரசு நிர்வாகத்தில் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஊடுருவ வழிவகுக்கும் என்ற அச்சத்தை சமூக ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அரசுச் செலவில் ஒரு ஜோதிடரை அதிகாரியாக நியமிப்பது, மக்களிடையே அறிவியல் சிந்தனைக்கு மாறாக, ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகளையே வலுப்படுத்தும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். “ஜோதிடம் தனை இகழ்” என்ற பாரதியாரின் வரிகளைச் சுட்டிக்காட்டும் அவர்கள், பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டிய அரசு, இத்தகைய முடிவை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர். மேலும், ஒரு ஜோதிடர் அரசியல் ஆலோசனைகளை வழங்குவது நிர்வாகத் திறனைப் பாதிக்கும் என்பதும் இவர்களின் கருத்தாக உள்ளது.
த.மு.எ.ச கண்டனம்
இந்த நியமனத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் (த.மு.எ.ச) தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவின்படி, குடிமக்களிடையே அறிவியல் மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்ப்பது அரசின் கடமை. ஒரு ஜோதிடரை அதிகாரப்பூர்வப் பதவியில் அமர்த்துவது இந்தச் சட்ட நோக்கத்திற்கு எதிரானது.
தமிழ்நாடு நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வரும் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை மரபுக்கு இந்த நியமனம் ஒரு சறுக்கலாக அமையும். அரசியல் ஆலோசனைகள் என்பது தரவுகள் (Data) மற்றும் கள எதார்த்தங்களின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கக் கூடாது.
எனவே மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த நியமனத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
