17-வது சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து 108 இடங்களைக் கைப்பற்றியதால், ஆட்சி அமைக்க முற்பட்டது. அப்போது பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பதாக ஆளுநர் தெரிவித்தார். இதன்பின்னர் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்தார். முன்னதாக
2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் தெரிவித்தபோதும், அதனை ஏற்க மறுத்த ஆளுநர் 13ஆம் தேதிக்குள் (இன்று) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி இன்று முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தவெகவுக்கான 108 இடங்களில் திருச்சி கிழக்கில் விஜய் ராஜினாமா செய்தார். திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ ஒரு ஓட்டில் வெற்றி பெற்றது தொடர்பான வழக்கு நிலுவையில் இப்பதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இயலாது. இதனால் தவெகவின் பலம் 106ஆகக் குறைந்துள்ளது. அதே நேரம் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் தவெகவின் பலம் தற்போது 119ஆக அதிகரித்திருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் போதும் என்னும் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அப்போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அரசின் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிவார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பினை நடத்துவார். வாக்கெடுப்பு நடைபெறும் போது அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதில் சரி பாதியை விட ஒன்று கூடுதலாக எடுத்தால் வெற்றி பெற்றதாக கணக்கிடப்படும். தற்போதைய நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 30 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ஒருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கூடுதலாக ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், முதலமைச்சர் ஜோசப் விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை கதவுகள் திறந்தே உள்ளது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டவுடன் இந்த தகவல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version