சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், சட்டவிரோதமாக இணையத்தி்ல் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்க்ஷன்ஸ் அளித்த புகாரில், சென்னை சைபர் க்ரைம் போலீஸார், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது.

வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version