சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 21) கலந்துகொண்டார். மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஆகியோருடன் இணைந்து யோகா செய்த பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றினார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, யோகா என்பது உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் சக்தி என்று குறிப்பிட்டார். “இன்று ஒட்டுமொத்த தேசமும், உலகமும் யோகா மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இதுதான் யோகாவின் சக்தி. இந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த உலகிற்கும், மனித சமுதாயத்திற்கும் எனது மனமார்ந்த யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். மேலும், யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மக்கள் மேற்கொண்ட தூய்மைப் பணிகளையும் அவர் மனதாரப் பாராட்டினார்.

மேற்கு வங்கத்தின் ஆன்மீகப் பெருமைகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், லாகிரி மகாசாயர் போன்ற ஆன்மீக ஞானிகள் வாழ்ந்த இந்தத் திருபூமியில் யோகா தினத்தைக் கொண்டாடுவதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். உலகிற்கு யோகக் கலையைக் கொண்டு சேர்த்த இத்தகைய மகான்கள் வாழ்ந்த மண்ணில், மக்களுடன் இணைந்து யோகா செய்வது ஒரு ஆழமான ஆன்மீக அனுபவத்தைத் தருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் யோகா என்பது தனிமனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் அமைதியான எதிர்காலத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

யோகாவை ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடும் நிகழ்வாக மாற்றாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்த ஆண்டின் யோகா தின மையக்கருத்தான “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” (Yoga for Healthy Ageing) என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், “மக்கள் தங்களது 30 வயதில் இருந்ததை விட, 50 வயதை எட்டும்போது இன்னும் அதிக உடற்தகுதியுடனும், சுறுசுறுப்புடனும், மன வலிமையுடனும் திகழ யோகாவை ஒரு வாழ்க்கை நெறியாக மாற்றிக் கொள்ள வேண்டும்,” என அறிவுறுத்தினார்.

பிரதமரின் இந்த உரைக்குப் பிறகு, மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகாசனங்களைச் செய்து பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version