எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்பதால் தயாராக இருக்குமாறு தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய தவெக சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்வெட்டு காரணமாக தமிழகத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். தொழில்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லும் சூழல் உருவாகி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவுடன்தான் தற்போதைய தவெக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதனால், இன்னும் 6 மாதங்களில் கூட எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை, பாதாளத்திற்குச் செல்வதைத் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த ஸ்டாலின், மக்களின் பாதுகாப்பு அரணாகச் செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் திமுகவுக்கு மட்டுமே உண்டு என்றார். திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான வளர்ச்சியைப் பெற்று, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 2-ம் இடத்திற்கு முன்னேறியிருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.