தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் மற்றும் 1.20 லட்சம் சிகரெட்டுகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டாரஸ் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடல் எல்லையைப் பயன்படுத்தி இலங்கைக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பீடி இலைகள், சிகரெட்டுகள், மருந்து பொருட்கள், வலி நிவாரண மாத்திரைகள், மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பட்டாசுகள் மற்றும் வாசனை சோப்புகள் எனப் பல பொருட்கள் படகுகள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கடற்பகுதியில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு கடத்தலை முறியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை ஓரமாக படகு மூலம் இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கடலோர காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்துவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு டாரஸ் லாரியை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.  அதில், இலங்கைக்கு விசைப்படகு மூலம் கடத்துவதற்காக மூட்டை மூட்டையாகப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் இருந்த 1,400 கிலோ பீடி இலைகள் மற்றும் 1,20,000 எண்ணிக்கையிலான சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடத்தல் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டாரஸ் லாரியைக் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரான மாரிகுமார் என்பவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கடத்தல் பொருட்களும் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version