தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநர் இமயம் எனக் கொண்டாடப்பட்டவர் பாரதிராஜா. தமிழகக் கிராமங்களை தனது காமிராக் கண்களால் வெள்ளித்திரையில் நடமாடமிட்டதோடு, குறிப்பிட்ட சமூகத்தினரின் பிடியில் இருந்த திரைப்படத் துறையை எல்லோருக்கும் பொதுவாக்கியவர்களில் குறிப்பிடத் தக்கவர் பாரதிராஜா.
தனது திரைப்படங்களின் மூலம் எளிய மக்களின் கதைகளை முன்வைத்ததோடு, சாதி மறுப்பு திருமணம், மதங்களைக் கடந்த காதல் என சமூகப் புரட்சியையும் ஊட்டியவர் பாரதிராஜா.
இளையராஜா, வைரமுத்து என அவர் அறிமுகப்படுத்தியவர்கள் இன்றளவும் தமிழ்சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.
ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருப்பார் என்னும் எழுதப்படாத திரைப்பட விதிகளை அடித்து உடைத்து, 16 வயதினிலே படத்தில் கோமணத்துடன் நடமாடும் சப்பாணியை ஹீரோவாகக் காட்சிப் படுத்தியிருந்தார்.
தமிழ்த் திரைப்படத்தின் போக்கையே மாற்றியதோடு, பாரதிராஜா பாணி என இயக்குநர்களை அணிவகுக்க வைத்ததும் தமிழ்சினிமாவில் அவர் காட்டிய வெற்றிதான்.
இயக்கம், நடிப்பு என தனி ராஜாங்கம் நடத்தி வந்த பாரதிராஜா வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு மகன் மனோஜ் உயிரிழந்ததை தொடர்ந்து மிகுந்த வேதனைக்குள்ள பாரதிராஜா அதன்பின்னர் தளர்ந்தே காணப்பட்டார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த பாரதிராஜா நேற்று (ஜூன் 10) காலமானார்.
சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த அவரது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உள்பட திரைப்படத் துறையினரும், அரசியல் தலைவர்களும், சமூகத்தில் முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version