கோவை மாவட்டம் துடியலூர் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருட முயன்ற வடமாநில வாலிபர், இளைஞர்களிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆண்கள் விடுதியில் வேலைக்குச் செல்லும் மற்றும் கல்லூரியில் பயிலும் ஏராளமான இளைஞர்கள் தங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விடுதியின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரம் முயன்றும் பைக்கை திருட முடியாததால், அந்த நபர் விடுதிக்குள் நுழைந்து அங்கு இருந்த மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருட முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் இரவு பணியை முடித்து விடுதிக்கு திரும்பிய இரண்டு இளைஞர்கள், சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்த அந்த நபர், இளைஞர்களின் காலில் விழுந்து, “என்னை விட்டுவிடுங்கள்… தெரியாமல் செய்து விட்டேன்” என இந்தி மற்றும் அரைகுறை தமிழில் கதறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் அவரது நாடகத்தை நம்பாத இளைஞர்கள், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு, அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்த பிற திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
