னியார் பள்ளிகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் பள்ளிகளுக்கான உரிமங்களை ஜூலை மாதம் முதல் 100 சதவீதம் ஆன்லைன் மூலம் பெறலாம் என்றும், தனியார் பள்ளிகளை நடத்துவது இலாபக் கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்குத்தான் அமைச்சரா, அல்லது அரசுப் பள்ளிகளுக்கும் அமைச்சரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெற்றோருக்கு நிவாரணம் அளிக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் மேற்கூரை சேதம், கழிப்பறை, குடிநீர், பாதுகாப்புச் சுவர், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், 37,554 அரசுப் பள்ளிகளில் சுமார் 52 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், 11,890 தனியார் பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் பயில்வது அரசுப் பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காலியாக உள்ள சுமார் 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சீமான், தனியார் பள்ளிகள் மீதான அக்கறையில் ஒரு பகுதியையாவது அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் அரசு செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version