சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசியது, பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான  மேனன் அரவிந்த், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை ரஜினிகாந்துக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர்கராத்தே தியகராஜன் , மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோரும் இந்த சந்திப்பில் உடன்  இருந்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தாலும், இந்த சந்திப்புக்குப்பின்னர் அரசியல் காரணம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் பாஜகவில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர் அண்ணாமலை வீ த லீடர் என்னும் அமைப்பினைத் தொடங்கியுள்ளார். இதில் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இணைந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு பாஜக முன்னணியினர் பலரும்  பாஜகவிலிருந்து வெளியேறி அண்ணாமலையின் அமைப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களும், அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக கோவை, திருப்பூர் பகுதிகளில் போஸ்டர்களும் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஏற்கனவே ரஜினிகாந்தும் அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஜினிகாந்த் அண்ணாமலைக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பாரா என்னும் ஐயம் எழுந்த காரணத்தால்தான் பாஜகவினர் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளதாக அரசியல் அரங்கில் கூறப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version