விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மேற்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “விசிக ஏன் தமிழ் தேசியத்தைப் பேசுகிறது என்ற கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ்த் தேசிய உணர்வை வளர்ப்பதற்காகவே ஆண்டுதோறும் தமிழர் எழுச்சி நாளை கட்சி கொண்டாடி வருகிறது. சாதியை வேரறுக்கும் தமிழ்த் தேசியமே எங்கள் அரசியல். சாதி வெறி கொண்ட தமிழன் அல்ல, சாதியை ஒழிக்கும் தமிழன்தான் எங்களுக்குத் தேவை,” என்றார்.

மேலும், “அம்பேத்கர் மொழி, சாதி, மத பெருமையை வலியுறுத்தியவர் அல்ல. இந்தியாவில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் வாழ்நாள் முழுவதும் போராடினார். இன்று அம்பேத்கரை வணங்கிக் கொண்டே அவரது கொள்கைகளை காலி செய்யும் வேலையை பாஜக செய்து வருகிறது. இதை அம்பேத்கர், பெரியார், மார்க்சிய சிந்தனையின் கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் புரியும். மோடி, அமித் ஷா கண்ணாடி அணிந்து பார்த்தால் புரியாது,” என்று விமர்சித்தார்.

பாஜகவை தனிநபர் அடிப்படையில் எதிர்க்கவில்லை என்றும், அதன் கொள்கைகளையே எதிர்க்கிறோம் என்றும் திருமாவளவன் கூறினார். “ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியவை இந்துத்துவ தேசியவாதத்தின் பெயரில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பு அரசியலை முன்னெடுக்கின்றன. ஆனால் தமிழ்த் தேசியம் எந்த இனத்தையோ, மொழியையோ வெறுப்பதில்லை. மொழி உரிமை, இன உரிமை மற்றும் மாநில உரிமையைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த மாநில சுயாட்சி அவசியம். மாநிலங்கள் அதிகாரம் பெற்றால்தான் மத்திய அரசும் வலிமை பெறும். சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் தேசியத்தையே நாங்கள் விரும்புகிறோம். தேர்தல் வெற்றிக்காக அல்ல, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே விசிக உருவான இயக்கம். எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை விட கருத்தியல் அரசியலே எங்களுக்கு முக்கியம்,” எனக் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version