திருவாரூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சிறப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக அரசின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

தவெக அரசுக்கு சிபிஎம் அளித்து வரும் ஆதரவு குறித்து பேசிய அவர், “நாங்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்தே ஆதரவு அளித்து வருகிறோம். மே 8-ஆம் தேதி முதல் எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சியில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு எங்களுக்கு அரசியல் பலம் இல்லாத நிலையில், ஆட்சியில் பங்கேற்கும் எண்ணமும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

தற்போதைய ஆட்சியின் நிர்வாகம் குறித்து அவர் கூறுகையில், “பல்வேறு விஷயங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பலரும் என்னிடம் கூறுகிறார்கள். பணியிட மாற்றங்கள் எந்தவித பணப் பரிவர்த்தனையும் இல்லாமல் நடைபெறுகின்றன. அரசு ஒப்பந்தங்களும் லஞ்சமின்றி நியாயமான முறையில் வழங்கப்படுகின்றன என தகவல்கள் வருகின்றன. இதில் நாங்கள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. ஆனால் இப்படிப்பட்ட செய்திகள் வரவேற்கத்தக்க நல்ல அணுகுமுறையாகும்” என்றார்.

தமிழ்நாடு தினம் தொடர்பாக, நவம்பர் 1-ஆம் தேதியே அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என அறிவிக்கப்பட்ட நாள் என்பதால் அதையே அரசு விழாவாகக் கொண்டாடுவது பொருத்தமானது என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் குறித்து, எதிர்க்கட்சியாக இருப்பதால் விமர்சிப்பது இயல்பான அரசியல் நடைமுறை என்றார்.

தவெக அரசு நீடிக்காது என்ற கருத்துகளுக்கு பதிலளித்த அவர், “ஒருவர் கோபப்படுவதால் அரசு கவிழ்ந்து விடும் அளவுக்கு இந்த அரசு பலவீனமாக இல்லை” என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version