இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் இந்திய பந்துவீச்சை ஆதிக்கம் செலுத்தி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் அதிரடியாக விளையாடி 141 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக பெத்தெல் 91 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய ஜோ ரூட், வெறும் 48 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அணியின் ரன் வேகத்தை மேலும் உயர்த்தினார். இறுதிக்கட்டத்தில் ஜோஸ் பட்லர், 13 பந்துகளில் 41 ரன்கள் விளாசி இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து 82 ரன்கள் சேர்த்தது.

இந்தியாவின் அனைத்து பந்துவீச்சுகளையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தவிடுபொடியாக்கினர். ஒவ்வொரு பந்து வீச்சாளரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு குறைவாக வழங்கவில்லை. பிரசித் கிருஷ்ணா – 2 விக்கெட்டுகளும், பிரின்ஸ் யாதவ் – 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இளம் வேகப்பந்துவீச்சாளர் குர்னூர் பிரார், தனது 10 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற விரும்பத்தகாத சாதனையைப் பதிவு செய்தார். இதற்கு முன்பு 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கர்சன் கவ்ரி 11 ஓவர்களில் 81 ரன்கள் வழங்கியதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

முன்னதாக, இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

388 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை இந்தியா துரத்த வேண்டியுள்ள நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ள வரலாறு இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version