கருங்கடல் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள வணிகக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியக் குடிமக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய கடற்பரப்பு மற்றும் கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் நிலவும் மோதல் சூழல் காரணமாகப் பாதுகாப்பு நிலை மிகவும் நிலையற்றதாக உள்ளதாகவும், அப்பகுதியில் இயங்கும் கப்பல்கள் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களின் தீவிர அபாயங்களை எதிர்கொள்வதாகவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மோதல் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் கப்பல்களில் வேலை செய்ய விரும்புபவர்கள், தங்களது பணிகளை ஏற்கும் முன் தற்போதைய பாதுகாப்பு அபாயங்களை முறையாக மதிப்பிட வேண்டும் என்றும், கப்பலின் வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்களது பயண விவரங்களை குடும்பத்தினரிடம் தொடர்ந்து தெரிவிப்பதோடு, இந்திய அரசின் கடல்சார் நிர்வாக இயக்குநரகத்தின் வழிகாட்டுதல்களையும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கருங்கடல் மற்றும் உக்ரைன் கடற்கரை அருகே வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களில் 4 இந்தியர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 21 அன்று இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது.

கருங்கடல் பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்கள் அவசர உதவிக்கு ரஷ்யாவுக்கான இந்தியத் தூதரகத்தை (+7 9652773414) அல்லது உக்ரைனுக்கான இந்தியத் தூதரகத்தை (+38 0933559958) தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version