திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்க மனு தொடர்பாக, இருதரப்பினரிடமும் கூடுதல் விளக்கம் பெறுவதற்காக நேரில் ஆஜராகுமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தமிழக சட்டமன்றச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்றச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த மே 13, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த தகுதிநீக்க மனு தொடர்பாக, அதற்கு பதிலளித்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் விளக்கங்கள் மீது கூடுதல் தெளிவு தேவைப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் (கட்சி மாறுதல் காரணமாக தகுதியின்மையாக்குதல்) விதிகள் பிரிவு 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் கடந்த ஜூலை 3 அன்று முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் இசக்கி சுப்பையாவையும், ஜூலை 9 அன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் கே. மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அளித்த விளக்கங்கள், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர், இருதரப்பினரிடமும் மேலும் சில விளக்கங்களை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் கருதியுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், குறிப்பிட்ட நாளில் பேரவைத் தலைவர் அறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் விளக்கம் அளிக்கும் போது, மனுதாரரான எடப்பாடி பழனிசாமியும் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டமன்றச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகுதிநீக்க விவகாரத்தில் சட்டமன்றத் தலைவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version