பெண் குழந்தைகள் நலத்திட்ட உதவி வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய திருப்போரூர் ஒன்றிய சமூக நலத்துறை பெண் அலுவலர் உட்பட 3 ஊழியர்களைச் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியப்பிரியா . இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான இவர், அரசின் பெண் குழந்தைகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பித்திருந்தார். இதற்காகத் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கும் சமூக நலத்துறை பிரிவை அவர் அணுகியுள்ளார்.
அங்குப் பணியில் இருந்த உதவியாளர் ஜெயலட்சுமி, இந்த நலத்திட்ட உதவியைச் செய்து தர சத்தியப்பிரியாவிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்தியப்பிரியா, இதுகுறித்துச் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ரகசியமாகப் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சத்தியப்பிரியா நேற்று மதியம் திருப்போரூர் பி.டி.ஓ அலுவலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த உதவியாளர் ஜெயலட்சுமியிடம் பணத்தைக் கொடுத்தபோது, அதைத் தன் மேலதிகாரியான ஒன்றிய சமூக நல அலுவலர் உஷாராணியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அவரிடம் பணத்தைக் நீட்டியபோது, மேஜையில் இருந்த ஒரு குறிப்பேட்டின் உள்ளே வைக்குமாறு உஷாராணி தெரிவித்துள்ளார். சத்தியப்பிரியா பணத்தை வைத்தபோது, அங்கிருந்த மற்றொரு உதவியாளரான வளர்மதியும் அந்தப் பணத்தைத் தொட்டுப் பார்த்துள்ளார்.
அப்போது, அலுவலகத்தில் சாதாரண உடையில் மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சரவணன் மற்றும் ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். லஞ்சப் பணத்தை வாங்கிய சமூக நல அலுவலர் உஷாராணி, உதவியாளர்கள் ஜெயலட்சுமி மற்றும் வளர்மதி ஆகிய 3 பேரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
