இளைஞர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துகளுக்கு எதிராக சமூக ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்தி உருவாகும் அரசியல் நையாண்டி இயக்கங்கள் தற்போது தெற்காசிய நாடுகளில் கவனம் பெற்றுள்ளன. இந்தியாவில் உருவான “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” இயக்கத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்திலும் “பிராய்லர் சிக்கன் கட்சி” என்ற பெயரில் மாணவர் எதிர்ப்பு இயக்கம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் படித்தும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகள் போன்ற உருவகங்களுடன் ஒப்பிட்டதாகக் கூறப்பட்ட இந்த கருத்துக்கு எதிராக சில இளைஞர்கள் அரசியல் நையாண்டி முறையில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் இயக்கத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் கேலிக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான இந்த இயக்கம், தற்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்களை முன்னெடுத்து கவனம் ஈர்த்து வருகிறது.

இதேபோன்ற சூழல் தற்போது வங்கதேசத்திலும் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைக் கல்விக்கான பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை கல்வித்துறை அமைச்சர் எஹ்சனுல் ஹக் மிலோன் “பண்ணைக் கோழிகள்” என விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த வார்த்தைகள் மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதற்கு பதிலடியாக சமூக வலைதளங்களில் “பிராய்லர் சிக்கன் கட்சி” என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டன.

“நாங்கள் அவமதிக்கப்படவில்லை; விழித்தெழுந்துள்ளோம்” என்ற வாசகத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. தங்களை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் இந்த இயக்கத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இளைஞர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் புதிய அரசியல் நையாண்டி வடிவமாக உருவெடுத்துள்ள இத்தகைய இயக்கங்கள், சமூக ஊடக காலத்தில் வார்த்தைகளின் தாக்கம் எவ்வாறு பெரிய மக்கள் இயக்கங்களாக மாறுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version