சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் ஒ. பன்னீர்செல்வம், இசக்கி சுப்பையா, ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்போது பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
போடிநாயக்கனூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஒ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர் டி.கண்ணன் என்பவரும், சென்னையை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவரும் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷணன் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் விஸ்வநாதன் என்பவரும் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஐந்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தேர்தல் வழக்குகளுக்கு பதிலளிக்கும்படி இசக்கி சுப்பையா, ஒ. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷணன், ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதேபோல, ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி. விபின் சக்கரவர்த்தி, வாக்காளர்கள் இ.இசக்கிராஜா, ஆர். பத்மநாபன், ஆகியோர் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். தி.நகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ.-வான அமைச்சர் ஆனந்த் வெற்றியை எதிர்த்து பாலசுப்ரமணிய சர்மா தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஐந்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவாரத்தி செய்ய மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கி வழக்குகளை ஜூலை 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
