திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப் பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல், தண்டையார்பட்டியைச் சேர்ந்த மோகன் மற்றும் தொழிலாளர் முகவர் சுரேஷ் ஆகிய நான்கு பேரை திருவள்ளூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் உரிமையாளர் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி குமரப்பன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகராஜா சேகர், வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறை முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version