காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு – கர்நாடகா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியாவில் முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு நேற்று முதல் 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது. ஆனால், போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கர்நாடகா மறுத்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்திப் பெங்களூரு, மண்டியா, மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னட மற்றும் விவசாய அமைப்பினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மண்டியாவில் உள்ள குருஸ்ரீ  திரையரங்கை முற்றுகையிட்ட விஜய சேனா என்ற கன்னட அமைப்பினர், திரையரங்கின் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ படப் போஸ்டர்களைக் கிழித்து எறிந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இரு மாநில எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவை எதிர்த்துக் கர்நாடகா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான காவிரி மேலாண்மை ஆணையத்தின் (CWMA) அவசரக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

அதேவேளையில்,  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத் தேவைகளை எடுத்துரைப்பதற்காக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரைச் சந்திக்க முதல்வர் விஜய்  கர்நாடகா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version