தமிழகத்திலுள்ள அனைத்துத் திருக்கோவில்களிலும் முறைகேடுகளைத் தடுத்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் புதிய மற்றும் பொதுவான டெண்டர் முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோவில்களில் உள்ள பூக்கடை, பழக்கடை, முடிகாணிக்கை செலுத்துமிடம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் போன்ற  டெண்டர்களில் ஒரே நபர் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நடைமுறைகளை மாற்றியமைக்க இந்த புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய ஆன்லைன் முறையின்படி, டெண்டருக்கான அனைத்துப் படிவங்களும் ஒரே மாதிரியானதாக வடிவமைக்கப்பட்டு, முழுமையாக இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படும். முன்பு குறைந்த தொகையைக் கொட்டேஷனாக தருபவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்ட விதியை மாற்றி, கொட்டேஷன்கள் பெறப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதன்பின் மிகக் குறைந்த விலையைக் கோருபவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ரீ-பிட் மீட்டிங் (Pre-bid meeting) விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால், தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் எந்தவிதத் தயக்கமுமின்றி நேரடியாக டெண்டர் எடுத்து நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் உள்ள கடைகள் மற்றும் பார்க்கிங் வசதிகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. கோவில்களில் இயங்கும் அனைத்துக் கடைகளிலும் டிஜிட்டல் பில்லிங் முறை கட்டாயமாக்கப்படுவதன் மூலம், முறையான விலைக்குப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், கடைகளின் சரியான வருவாயைத் தெரிந்து கொள்ளவும் முடியும். அதேபோன்று, கோவில்களில் பார்க்கிங் கட்டணம் வெவ்வேறு விதமாக வசூலிக்கப்படுவதைத் தவிர்த்து, அனைத்துக் கோவில்களுக்கும் பொதுவான ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அங்கும் டிஜிட்டல் பில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இதனிடையே, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் மற்றும் அடையாள அட்டை போன்றவைகளில் குறைகள் உள்ளன என்ற புகார்களுக்குத் தீர்வு காணப்படவுள்ளது. இனி இவர்களுக்கு முறைப்படி ‘பே ஸ்லிப்’ (Pay Slip) வழங்கப்படுவதோடு, அவர்களின் சம்பளம் மற்றும் பிடித்தம் குறித்த அனைத்து விவரங்களும் வெளிப்படையாகத் தெரியப்படுத்தப்படும். தற்போது பல்வேறு கோவில்களில் ஒப்பந்தக் காலங்கள் வெவ்வேறாக இருப்பதால், ஒரே கட்டமாக அனைத்தையும் மாற்றாமல், அந்தந்தக் கோவில்களில் ஏற்கனவே உள்ள டெண்டர் காலம் முடியும்போது இந்த புதிய வழிமுறைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version