காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்,
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, இது குறித்துப் பேசுவதற்கு வேறு எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று கூறினார்.
மேலும், காவிரி நதி நீர் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் உச்சநீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது,
இந்த நிலையில் இரு மாநில பிரதிநிதிகளும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்த முயல்வது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்றார்.
கர்நாடகாவில் உள்ள நீர் பிடிப்பு மற்றும் பாசன பகுதிகளைப் பார்வையிடச் செல்லும் பட்சத்தில், அங்கிருந்து திரும்பும்போது கர்நாடக முதலமைச்சரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் நீரின்றிக் காய்ந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதி பாசன நிலங்களை அவர்களும் நேரடியாகப் பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
