யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் (UEFA Champions League) கால்பந்து தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், இங்கிலாந்தின் ஆர்சனல் அணியை வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து பாரிஸ் நகர வீதிகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நள்ளிரவில் இந்த கொண்டாட்டம் திடீரென வன்முறையாக மாறியதால் பாரிஸ் மாநகரமே போர்க்களமாக காட்சியளித்தது.

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒருதரப்பு ரசிகர்கள், பாரிஸின் முக்கிய சாலைகளில் நின்றிருந்த கார்கள் மற்றும் இதர வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதனால் நகரின் பல பகுதிகள் கவலர பூமியாக மாறி, புகைமண்டலமாக காட்சியளித்தன.

பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த வந்த போலீஸார் மீது பட்டாசுகள் மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர்.

வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரிஸ் நகரின் முக்கிய மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் பேருந்து போக்குவரத்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

பாரிஸ் நகர பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாரிஸில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது பாரிஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கால்பந்து போட்டியின் வெற்றி கொண்டாட்டம் வன்முறையில் முடிந்தது பிரான்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version