மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் சிறுவன் உட்பட மூன்று பேரை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், கவியரசன் (14) என்ற மகனும் உள்ளனர்.
இன்று காலை கற்பகம் வீட்டின் அருகே உள்ள பொதுக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும் திமுக பெண் கவுன்சிலர் ஜெயலட்சுமி முருகனின் மகன் அசோக் (25) என்பவருடன் பழைய பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அசோக் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கற்பகத்தை கொடூரமாக வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவர் செல்வம் மற்றும் மகன் கவியரசன் ஆகியோரையும் அசோக் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த மூவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கற்பகத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையில், தாக்குதல் நடத்திய அசோக் நேராக மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்தத் துணிகரத் தாக்குதல் சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோதலுக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
