சென்னை வேளச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

வேளச்சேரி 100 அடி சாலையில் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதை உடனடியாக கவனித்த பேருந்து ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

அவர் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி பாதுகாப்பாக வெளியேறிய சில நிமிடங்களிலேயே, பேருந்து முழுவதும் தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நல்வாய்ப்பாக, தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பேருந்திற்குள் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தண்ணீரைப் பாய்ச்சி அடித்து பலத்த போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பள்ளி பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

தீயணைப்புப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் காரணமாக, வேளச்சேரி 100 அடி சாலையில் தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், நிலைமை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. திடீர் தீ விபத்திற்கான காரணம் இன்ஜின் இயந்திரக் கோளாறா, மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version