சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நிர்வாக இதயமான தலைமைச் செயலக வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகைப் பதிவில் புரட்சிகர மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் (கைரேகை) மற்றும் முக அங்கீகார (Face ID) தொழில்நுட்பங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த முறை முதலில் மனிதவள மேலாண்மைத் துறையில் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து துறைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகம் மற்றும் 10 தளங்கள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாநிலத்தின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் இயங்கி வருகின்றன. இங்கு 54 துறை செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினசரி பணியாற்றுகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலக நேரம் நீடிக்கும். உணவு இடைவேளை அரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை கையொப்ப முறையில் வருகைப் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தொடுதிரை இயந்திரங்கள் மூலம் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வருகை நேரம், தாமதம், முன்கூட்டிய வெளியேற்றம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் துல்லியமாகப் பதிவாகும். இந்த அமைப்பு நிர்வாக ஒழுக்கத்தை வலுப்படுத்துவதோடு, பணி நேரத்தை முறையாகப் பயன்படுத்தி பொது மக்களுக்கு துரித சேவை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆட்சியின் போது தலைமைச் செயலகம் முழுவதும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டபோது, தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

தற்போது மீண்டும் மனிதவள மேலாண்மைத் துறையில் தொடங்கியுள்ள இந்த முயற்சி, படிப்படியாக முழு வளாகத்துக்கும் நீட்டிக்கப்பட உள்ளது. அரசு அதிகாரிகள் கூறுகையில், “நிர்வாகத்தை மேம்படுத்தி, ஊழியர்களின் பணி திறனை அதிகரிப்பதோடு, பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் அவசியம். e-Governance மற்றும் டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றனர்.ஊழியர்கள் தரப்பில் சிலர் தொழில்நுட்பப் பிரச்னைகள், தனியுரிமை குறித்த கவலைகளை வெளியிட்டாலும், பெரும்பாலானோர் இந்த மாற்றத்தை வரவேற்கின்றனர்.

“இது அலுவலக ஒழுக்கத்தை மேம்படுத்தும். தவறான பதிவுகள் தவிர்க்கப்படும்” என சிலர் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசின் நிர்வாக சீர்திருத்த முயற்சிகளில் இது முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. ஊழியர்களின் பணி நேர ஒழுக்கம் மேம்படுத்தப்பட்டால், அரசு திட்டங்கள் விரைவாகச் செயல்படுத்தப்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விரைவில் முழு செயலக வளாகத்திலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முழுமையாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version